பல்லடம்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அம்மாபாளையத்தை சேர்ந்தவர் பாலகுரு (வயது 35). இவர் பல்லடம்-தாராபுரம் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் காசாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஓட்டலில் வேலை பார்த்து விட்டு கொசவம்பாளையம் ரோடு இட்டேறி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் முன்பு திடீரென்று ஒரு கார் வந்து நின்றது. அந்த காரில் மொத்தம் 6 பேர் இருந்தனர்.

அவர்களில் 2 பேர் மட்டும் காரில் இருந்து இறங்கினார்கள். பின்னர் அந்த 2 பேரும், பாலகுருவை கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்து இருந்த சங்கிலி மற்றும் அவரிடம் இருந்து ரூ.1,450-ஐ பறிமுதல் செய்தனர். அப்போது அந்த சங்கிலி பித்தளை என்பதால் அங்கேயே தூக்கி வீசிவிட்டனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது, பாலகுரு கூச்சல் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிச்சென்று அந்த ஆசாமிகளை காருடன் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை பல்லடம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா அவர்களிடம் விசாரித்தார். விசாரணையில் அவர்கள், மதுரை ஏ.புதூர் மகாலட்சுமிநகர் 3-வது வீதியை சேர்ந்த முகமது சபி என்கிற மதன் (27), பல்லடம் காமராஜர்நகர் செந்தோட்டம் கடைவீதியை சேர்ந்த சிவராமன் (23), திருப்பூர்-மங்கலம் ரோடு பாரப்பாளையம் அய்யன்நகர் 2-வது வீதியை சேர்ந்த கார்த்திக் (22), திருப்பூர்-காங்கேயம் ரோடு பகுதியை சேர்ந்த நவுபில் (20), திருப்பூர் ராயபுரம் பள்ளி வீதியை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் (21) மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அண்ணாநகர் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த சகாபுதீன் (26) ஆகியோர் என தெரியவந்தது.

இதையடுத்து இவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கார், கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here