தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்திலும் நாளுக்கு நாள் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. நிலத்தடி நீரின் அளவும் குறைந்து வருகிறது. இந்த நிலையில் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு மாநகராட்சி சார்பில் வீட்டு குழாய் மற்றும் தெருகுழாய்கள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் சில நேரங்களில் அதில் உப்புத்தன்மை அதிகமாக இருப்பதால் பெரும்பாலான பொதுமக்கள் 20 லிட்டர் கேன் தண்ணீரையே விலை கொடுத்து வாங்கி குடிப்பதற்காக பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்களுக்கு குடிநீரை கேன்களில் அடைத்து விற்பனை செய்யும் பணியில் திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான சிறிய மற்றும் பெரிய அளவிலான குடிநீர் கேன் விற்பனை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. குடிநீரின் தேவை அதிகம் இல்லாத நேரங்களில் 20 லிட்டர் குடிநீர் கேன் ஒன்றின் விலை ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் கோடை காலம் தொடங்கி விட்டால் குடிநீரின் தேவைக்கு ஏற்ப கேன் தண்ணீரின் விலையும் அதிகரிக்கும். அந்த வகையில் தற்போது கேன் குடிநீரின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
தற்போது 20 லிட்டர் கேன் குடிநீரின் விலை ரூ.35 வரை விற்பனை செய்யப்படுகிறது. இடத்திற்கு ஏற்ப இந்த விலையில் மாற்றமும் ஏற்படுகிறது. இதனால் குடிநீருக்காகவே பொதுமக்கள் தங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க கோடை மற்றும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சமயங்களிலும், போலியான பல குடிநீர் கேன் வினியோகிக்கும் நிறுவனங்களும் முளைத்து விடுகின்றன.
இதை நம்பி வாங்கும் பொதுமக்களுக்கு சில நேரங்களில் உடல் உபாதைகளும், தொற்று நோய்களும் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு சுகாதாரத்துறை அதிகாரிகள், வறட்சி சமயங்களில் குடிநீரை கேன்களில் அடைத்து வைத்து விற்பனை செய்யும் நிறுவனங்களில் அவ்வப்போது சோதனை நடத்தி, தூய்மையான குடிநீர் வினியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். சோதனையின் போது அனுமதியின்றி, சுகாதாரமில்லாமல் இயங்கும் நிறுவனங்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அந்த நிறுவனங்களை மூடுவதுடன், அதை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூரில் உள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here