கான் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து போதனைகளை வழங்கிக்கொண்டிருந்தார்.அவரைச் சுற்றி பலரும் அமர்ந்து கொண்டு அவரின் பேச்சை ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தனர்.

“இன்றைக்கு உங்களுக்கு ஒரு கதை சொல்லப்போகிறேன்”.என்றார்.

         ‘சரியும்-பிழையும்

     “ஆயிரம் நல்லது செய்திருந்தாலும் கண்ணுக்குத் தெரியாது,ஆனால் தெரியாமல் செய்த ஒரு சிறு பிழை பூதாகரமாக தெரியும்”.

       “ஓர் ஊரில் ராஜூ என்ற விவசாயி வாழ்ந்து வந்தார்.அவர் தினமும் தன் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவார்.ஒருநாள் அவரின் பக்கத்து வீட்டுக்காரர், வேலையாக வெளியூருக்குச் சென்று விட்டு நான்கு நாட்களில் திரும்பி வந்து விடுவதாகவும்,அதுவரை அவரின் தோட்டத்திற்கும் தண்ணீர் விடச் சொல்லியும் சொல்லி விட்டு சென்று விட்டார்.ராஜூவும் அவரின் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு பக்கத்து வீட்டுக்காரர் தோட்டத்திற்கும் தண்ணீர் பாய்ச்சுவார்.இப்படியே நான்கு நாட்கள் சென்றன.ஐந்தாவது நாள், ராஜூவின் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு பக்கத்து வீட்டுக்காரரின் தோட்டத்திற்கும் தண்ணீர் பாய்ச்ச நினைக்கும் போது,அவரின் வைக்கோல் கொல்லை தீப்பிடித்து எரிந்தது.வயலுக்கு பாய்ச்ச நினைத்த தண்ணீரை, வைக்கோலில் பிடித்த தீயை அணைக்க பாய்ச்சிவிட்டார்.தோட்டத்திற்கு சொந்தக்காரர் ஊரிலிருந்து திரும்பி வந்தார்.வயலுக்கு தண்ணீர் பாய்ச்சாததைக் கண்டு ராஜூ மீது கோபப்பட்டார்.ராஜூ தன் நிலைமையை எடுத்துக் கூறியும் பக்கத்து வீட்டுக்காரர் கேட்கவில்லை.அன்றிலிருந்து அவர் ராஜூவிடம் பேசுவதில்லை”.என்று கூறி முடித்தார்.

  “பார்த்தீர்களா,நாம் பிறருக்கு எவ்வளவு தான் நல்லது செய்தாலும்,தெரியாமல் செய்த ஒரு சிறு பிழைதான் பெரிய விஷயமாகத் தெரியும்.

– க.கங்காதரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here