அது ஒரு சூரிய அஸ்தமனம்.நேரம் மாலை 6:30 மணி.பறவைகள் இறையைத் தேடி விட்டு அடைவதற்காக அங்கும் இங்கும் பறக்கின்றன.காடுகளுக்கு நடுவே ஒரு சிற்றூர் தெரிகிறது.அதன் பெயர் தான் ‘*பேய்க்குடி*’. ஊருக்கு வெளியே பொட்டலும்,கள்ளிச்செடிகளும் மட்டுமே காணப்படுகிறது.ஊருக்குள் ஆங்காங்கே சில வீடுகள்.ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு மடம் இருக்கிறது.அங்கே நான்கைந்து பெரியவர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்கின்றனர். அப்போது அவ்வூருக்கு ஒரு எழுத்தாளர் வருகிறார்.அவரைப் பார்த்து ஒரு பெரியவர்,

    “தம்பி….யாருங்க ஊருக்கு புதுசா இருக்கீங்க?”என்று கேட்கிறார்.

எழுத்தாளர் :ஐயா,நான் ஒரு எழுத்தாளர்.இந்த ஊரப் பத்தி ஒரு கதை எழுதலாம்னு வந்தேன்.

பெரியவர் :கதையா….?

எழுத்தாளர் :ஆமா….நா கிராமங்கள பத்தி கதை எழுதுறவன்.

பெரியவர் :ஓ…..அப்படியா?

எழுத்தாளர் :சின்ன சந்தேகம்….கேட்கலாமா?

பெரியவர் :என்ன?

எழுத்தாளர் :அது என்ன இந்த ஊருக்கு வித்தியாசமான பேரு? ‘பேய்க்குடி’.

பெரியவர் :அது ஒரு பெரிய கதை தம்பி…. கோவில் இல்லாத ஊர்ல குடியேறக் கூடாதுனு சொல்லுவாங்க. ஆனா பேய்ங்க குடியேறுன ஊர்ல நாங்க இருக்கோம்.

எழுத்தாளர் :புரியலயே….?

பெரியவர் :ரொம்ப வருஷங்களுக்கு முன்னால இந்த ஊர்ல ஏற்பட்ட பஞ்சத்துனால ஊரே தற்கொலை பண்ணிக்கிட்டாங்க.அவங்க எல்லாரும் தான் பேயா ஊருக்குள்ள குடியேறி இருக்காங்க.அதனாலதான் இந்த ஊருக்கு ‘பேய்க்குடி’ அப்படினு பேரு வந்துச்சு.

எழுத்தாளர் அதைக்கேட்டவுடன் சிரித்தார்.

பெரியவர் :என்ன தம்பி சிரிக்கிறீங்க?

எழுத்தாளர் :இல்ல…..பொதுவா கிராமம்னாலே இந்த மாதிரி கதையெல்லாம் சகஜம் தான்.ஆனா நீங்க சொல்றது புதுசாவும் இருக்கு,வித்தியாசமாவும் இருக்கு.ஒரு சந்தேகம்…..ரொம்ப வருஷங்களுக்கு முன்னால பேய் இருந்திச்சு னு சொல்றீங்க,இன்னமுமா அதெல்லாம் இருக்கு?இப்ப அந்த சக்தியெல்லாம் அழிந்திருக்காதா?

இன்னொரு பெரியவர் :அழிவா..? உடம்புக்குத்தான் அழிவே தவிர ஆன்மாவுக்கு இல்ல…ஆன்மாக்கள் எத்தன வருசம் ஆனாலும் பூமிய விட்டு போகாது.

எழுத்தாளர் :நா ஒரு எழுத்தாளர்.எத்தனையோ கதைகள எழுதி இருக்கேன்.ஆனா நீங்க சொல்ற கதை ரொம்ப வித்தியாசமா இருக்கு.

பெரியவர் :தம்பி…..இது கதையில்ல நிஜம்.வேணும்னா இன்னைக்கு ஒரு ராத்திரி இங்க இருந்து பாரு.அப்புறம் தெரியும்,இது கதையா உண்மையானு….

இன்னொரு பெரியவர் :யோவ்….நீ ஒரு வெளங்காத ஆளுயா…. வெளியூர் காரன தங்க வைக்கனும்னு சொல்றியே….அவருக்கு ஏதாவது ஆயிட்டா அவங்க குடும்பத்துக்கு நீயா பதில் சொல்லுவ? தம்பி நீங்க ஊருக்கு கெளம்புங்க….

எழுத்தாளர் :இல்லைங்க…. இன்னிக்கு ராத்திரி இங்க தங்கி பாக்குறேன்.அப்படி எதுவும் இல்லைன்னு நிரூபிக்கிறேன்.

பெரியவர் :அப்புறம் உன்னோட இஷ்டம்.

இரவு வந்தது…..அனைவரும் உறங்கினர். எழுத்தாளரும் அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார்.

    இரவு 1:00 மணி ஆனது.எழுத்தாளர் நன்கு உறங்கிக்கொண்டிருந்தார்.அப்போது வெளியில் நாய்கள் குழைக்கும் சத்தம் கேட்டது.அவர் விழித்தார்.நீண்ட நேரம் நாய்கள் குழைப்பதை நிறுத்தவில்லை. அதனால் வெளியில் சென்று பார்த்தார். வெளியே சென்று பார்த்ததும் சத்தம் நின்றுவிட்டது.பின் உள்ளே சென்று படுத்தார்.சிறிது நேரம் கழித்து வெளியே கொலுசு சத்தம் கேட்டது.பின் அந்த சத்தமும் நின்றுவிட்டது. அதற்கு பிறகு எந்த சத்தமும் கேட்கவில்லை.

மறுநாள்……

பெரியவர் எழுத்தாளரைப் பார்த்து.,

பெரியவர் :என்ன தம்பி ராத்திரி நல்லா தூங்குனீங்களா?

எழுத்தாளர் :எங்க….ராத்திரி எல்லாம் நாய் குழைச்சுக்கிட்டே இருந்திச்சு.எப்படி தூக்கம் வரும்? அப்புறமா கொலுசு சத்தம் வேற கேட்டுச்சு.

பெரியவர் :பாத்தீங்களா தம்பி, இப்பவாவது நம்புறீங்களா?

எழுத்தாளர் :ஐயா,இதையெல்லாம் வச்சு பேய் னு முடிவு பண்ண முடியுமா?இது பிரம்மையாக்கூட இருக்கலாம்.

பெரியவர் :தம்பி….இது விளையாட்டு விஷயம் இல்ல…..இதுதான் ஆரம்பம்.இங்க இருக்கக்கூடாது னு எச்சரிக்கை பண்ணியிருக்கு….இதுக்கு மேல இங்க தங்குறதா வேணாமானு நீங்கதான் முடிவு பண்ணனும்.

அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது உடல்நிலை சரியில்லாமல் போன ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தனர்.அவர்களைப் பார்த்து.,

பெரியவர் :டேய்..அந்தக் குழந்தைய மந்திரவாதிகிட்ட கூட்டிட்டு போங்கடா.

என்றார்.அவரைப் பார்த்து.,

எழுத்தாளர் :ஐயா,குழந்தைக்கு உடம்பு சரியில்லனா ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகணும்.மந்திரவாதிகிட்ட கொண்டு போகனும் னு சொல்றீங்க?

பெரியவர் :தம்பி…..உனக்கு அந்த மந்திரவாதியப் பத்தி தெரியாது.எப்பேற்பட்ட நோயையும் அவரு குணப்படுத்திடுவாரு.அது மட்டும் இல்ல,அவரு கொடுத்த தாயத்துதான் எல்லாரோட கையிலேயும் இருக்கு.அது இருந்தா எந்த தீய சக்தியும் ஒண்ணும் பண்ண முடியாது.நீங்க வாங்க நீங்களும் ஒரு தாயத்து வாங்கி கையில கட்டுங்க.

எழுத்தாளர் :என்னங்கய்யா, இந்தக்காலத்துல போய் இதெல்லாம் முட்டாள்தனமா இல்லையா?

பெரியவர் :அப்படி சொல்லக்கூடாது தம்பி….இது எங்களோட நம்பிக்க.அவரோட சக்தியப் பத்தி தெரியாம பேசாத.நீ என்கூட வா,அவரப்பத்தி தெரிஞ்சுக்கோ.

எழுத்தாளர் :அது இல்லைங்க…..

பெரியவர் :பரவாயில்ல வாங்க தம்பி….

என்று கூட்டிக்கொண்டு சென்றார்.

அங்கே மந்திரவாதி வீட்டில்,குழந்தைக்கு திருநீறு பூசுகிறார்,மந்திரவாதி.

மந்திரவாதி :இனிமே இந்தக் குழந்தைக்கு ஒண்ணும் ஆகாது.கூட்டிட்டு போங்க.

அதைப் பார்த்து.,

எழுத்தாளர் :என்னங்க இது?விபூதி போட்டா எல்லாம் சரி ஆயிடுமா?இன்னும் பழைய மூடநம்பிக்கையில மூழ்கி இருக்கீங்க.முட்டாத்தனமா இல்லையா?

மந்திரவாதி :யாரது?

பெரியவர் :நம்ம ஊருக்கு புதுசா வந்திருக்குற எழுத்தாளர்.

மந்திரவாதி,எழுத்தாளரை வரச்சொன்னார். எழுத்தாளர் மந்திரவாதி அருகே வந்தார்.

மந்திரவாதி :என்ன தம்பி?ஏதோ சொன்ன மாதிரி இருந்துச்சு?

எழுத்தாளர் :இல்ல,தொழில்நுட்பம் எவ்வளவோ முன்னேறுன இந்த இருபத்தோறாம் நூற்றாண்டுல கூட,நோய்க்கு மருந்துக்கு பதிலா விபூதி பூசுறீங்க,பேய்,பிசாசு அப்படீன்னு சொல்றீங்க! தாயத்து கட்டச் சொல்றீங்க! இது முட்டாள்தனம் தானே?

மந்திரவாதி :பேசி முடிச்சிட்டயா? இது இருபத்தோறாம் நூற்றாண்டுதான்.ஆனா இந்த நூற்றாண்டிலயும் எதுக்காக இத்தன கோவில் இருக்கு?இந்த உலகத்துல நல்லது இருக்குற மாதிரி கெட்டதும் இருக்கத்தான் செய்யுது.இப்ப பயன்படுத்துற விஞ்ஞானம்,தொழில்நுட்பம் எல்லாம் 18ம் நூற்றாண்டில கண்டுபிடிச்சதுதான்.ஆனா,நீங்க மூடநம்பிக்கையா நினைக்குற பேய்,பிசாசு பத்தி பல்லாயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னாலயே சொல்லி இருக்காங்க.3000 வருசத்துக்கு முன்னால எழுதின ‘அதர்வண வேதத்திலேயும்’ இதப்பத்தி சொல்லியிருக்கு.இந்த உலகத்துல மனித சக்திக்கும் அப்பாற்பட்ட நிறைய சக்திங்க இருக்கு.இதெல்லாம் சொன்னா உங்க வயசுக்கு புரியாது தம்பி….

எழுத்தாளர் மௌனமாக இருந்தார்.

மந்திரவாதி :இந்தா இந்த தாயத்த உன் கையில கட்டு.எந்தக் காரணத்தக் கொண்டும் இத கையில இருந்து கழட்டாத.

என்று தாயத்தை எழுத்தாளர் கையில் கொடுத்தார்.அதை வாங்கிக் கொண்டு எழுத்தாளரும்,பெரியவரும் அங்கிருந்து கிளம்பினர்.

அன்று இரவு,எழுத்தாளர் வீட்டில் இருக்கும் போது,

    “இந்த தாயத்தை கழட்டக்கூடாது னு சொல்லி இருக்காரு, கழட்டுனா என்ன ஆகும்? கழட்டித்தான் பாப்போம்!”

    என்று தாயத்தை கழட்டினார்.பின் வீட்டை விட்டு வெளியே சென்றார்.சிறிது தூரம் நடந்து சென்றார்.பயங்கர இருட்டு.அதையும் பொருட்படுத்தாமல் நடந்து சென்றார்…..ஒரு மரத்தில் இருந்த ஆந்தை,    

    “வேண்டாம் திரும்பி போய்டு” என்று செல்வதைப் போல் தலையை ஆட்டியது.சுற்றி ஏதோ இருப்பதைப் போன்ற உணர்வு வந்தது.சுற்றியும் பார்த்தார்,
ஓர் இடத்தில் கருப்பான ஓர் உருவம்,சிவப்பு நிற கண்கள்,பற்கள் தெரிய நின்று இருந்தது போல் தெரிந்தது.வேறு இடத்தை பார்த்து விட்டு மறுபடியும் அங்கே பார்த்தார்.அங்கு அந்த உருவம் தென்படவில்லை. மறுபடியும் சிறிது தூரம் நடந்தார்.அங்கே ஒரு மரத்தில் இருந்து கயிறு வந்து அவர் முகத்துக்கு நேராக நின்றது.பயத்தில் இறுக்கமாக கண்களை மூடினார்.கண்ணைத் திறந்ததும் கயிறு இல்லை.பின்னால் திரும்பினார்,அங்கே அந்த கருப்பு உருவம் நின்றது.மறுபடியும் தன் முகத்தை மூடி, பயத்தில் சத்தமாக கத்தினார்.கண்ணைத் திறந்ததும் எதுவும் இல்லை.தூரத்தில் கொலுசு சத்தம் கேட்டது.ஒரு பெண் அங்கே வந்தாள்.

“நீதான் இந்த ஊருக்கு புதுசா வந்த எழுத்தாளரா?” என்று கேட்டாள்.

எழுத்தாளர் :ஆமா…நீங்க?

  என்று பயந்தபடியே கேட்டார்.

     “நானும் இதே ஊருதான்”என்றாள் அந்தப்பெண்.

“இது ரொம்ப ஆபத்தான இடம்.வா என் கூட”

   என்று அவரைக் கூட்டிக்கொண்டு சென்றாள்.பின் ஒரு பாழடைந்த கிணற்றுக்கு சென்றாள்.எழுத்தாளருக்கு ஒன்றும் புரியவில்லை.பின் கிணற்றைப் பார்த்துக்கொண்டே நின்றாள்.அவர் அவளை விட்டு ஐந்து அடி தள்ளியே நின்றார்.

அவளின் முகம் மாறியதை கவனித்தார்.அதைப் பார்த்ததும் அவர் அதிர்ந்து போனார்.

       “இவ நிச்சயமா அமானுஷ்ய சக்திதான்,இங்க இருக்கக்கூடாது” என்று அவளுக்குத் தெரியாமல் வேகமாக ஓடி,வீட்டுக்குச்சென்றார்.பின் தாயத்தை கையில் கட்டினார்.

மறுநாள் காலை….
  நடந்த எல்லாவற்றையும் எழுத்தாளர்,பெரியவரிடம் கூறினார்.

பெரியவர் :யாரு செஞ்ச புண்ணியமோ, நீங்க உயிர் பிழைச்சு இருக்கீங்க.தயவு செஞ்சு இனிமே இந்த தப்பு பண்ணாதீங்க.

எழுத்தாளர் :ஆமா ஐயா,இப்போ நம்புறேன்.நீங்க எவ்வளவோ சொல்லியும் கேட்கல.என்ன மன்னிச்சிடுங்க.இவ்வளவு ஆபத்தான ஊர்ல எப்படி இருக்கீங்க?நீங்க பேசாம இந்த ஊர விட்டு போயிட வேண்டியது தானே!

பெரியவர் :அது எங்களால முடியாது தம்பி….

எழுத்தாளர் :ஏன்….?

பெரியவர் :அது எங்களோட சாபம் தம்பி.இந்த ஊர விட்டு வெளியே போனா,போனவங்க யாரும் உயிரோட இருந்ததில்ல.ஊர் எல்லையிலே ரத்தம் கக்கி செத்திடுவாங்க….இப்படி நிறைய பேரு செத்து இருக்காங்க….

எழுத்தாளர் :என்ன சொல்றீங்க? இதுக்கு என்னதான் தீர்வு?

பெரியவர் :இதுக்கு தீர்வு மந்திரவாதிகிட்ட தான் கேட்கணும்..

எழுத்தாளர் :சரி….வாங்க போவோம்.

இருவரும் மந்திரவாதியை பார்க்கச் சென்றனர். அப்போது.,

மந்திரவாதி :இந்த ஊரோட வரலாற்ற ஒரு ஓலைச்சுவடியில படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்…
முன்னொரு காலத்துல செல்வச் செழிப்பா இருந்த கிராமம்தான் இது.திடீர்னு அஞ்சு வருஷம் பஞ்சம் வந்திடுச்சு.குடிக்க தண்ணி கூட இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டாங்க. இந்த பஞ்சத்துக்கு என்ன காரணம் னு பார்க்கும்போது, தமிழ் வருஷத்துல ‘நந்தன வருஷம்’ அப்படினு ஒண்ணு இருக்கு.அந்த வருஷத்துல நல்லா மழை பேஞ்சு செழிப்பா இருந்தா,அடுத்த அஞ்சு வருஷம் பஞ்சம் வரும் னு பஞ்சாங்கத்துல இருக்கு.அந்த வருஷம் நல்லா செழிப்பா இருந்து ஊரே சந்தோஷமா இருந்துச்சு.ஆனா அந்த சந்தோஷம் மறு வருஷமே இல்லாம போச்சு.அடுத்த அஞ்சு வருஷம் பஞ்சத்துனால சாப்பாடு இல்லாம,தண்ணி இல்லாம எல்லாரும் கஷ்டப்பட்டாங்க.வேற வழி இல்லாம,வேற ஊருக்கும் போக முடியாம எல்லாரும் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க.அவங்க எல்லாரும் தான் பேயா ஊருக்குள்ள அலையுறாங்க அப்படினு அந்த ஓலைச்சுவடியில இருக்கு.

எழுத்தாளர் :ஒரு சின்ன சந்தேகம்…. அவங்க தற்கொலை பண்றதுக்கு முன்னாடி இந்த ஊருக்கு வேற பேரா இருந்திருக்குமே?

மந்திரவாதி :ஆமா,இந்த ஊருக்கு இருந்த பேரு ‘கோவில் மங்கலம்’.தற்கொலை பண்ணி இறந்ததுக்கு அப்புறம்,இந்த ஊருக்கு சில நாடோடிகள் வந்தாங்க.அவங்க வாழ்ந்த சில காலத்துல ஊரோட வரலாற்ற தெரிஞ்சுக்கிட்டாங்க,ஊர்ல பேய்ங்க குடியேறுனதால ‘பேய்க்குடி’ அப்படினு பேரும் வச்சாங்க.ஊர விட்டு நாடோடிகளா சுத்திக்கிட்டு இருந்தவங்களுக்கு அந்த ஊர விட்டா வேற போக்கிடம் இல்ல.ஊருக்குள்ள அலையுற பேய்ங்கள விரட்ட எவ்வளவோ முயற்சி பண்ணியும் முடியல.அவங்க வந்ததுக்கு பின்னால ஊரு செழிப்பா ஆயிடுச்சு.அதனால ஆவிங்க கோபமாகி,ஊர விட்டு யாரும் வெளியே போகக்கூடாதுனு சாபம் கொடுத்துட்டாங்க.இந்த ஊர்ல வாழ்றவங்கள தொல்லை செய்யணும்னு ஊர விட்டு போக விடாம அந்த ஆவிங்க சாபம் கொடுத்திடுச்சு.இந்த ஊரோட பழைய பேரு தெரியாம ‘பேய்க்குடி’ அப்படீங்குற பேருலயே இருந்திடுச்சு.

எழுத்தாளர் :ரொம்ப விசித்திரமா இருக்கே…..ஆமா,அந்த ஆவிங்க சாபத்துல இருந்து விடுபட ஏதாவது பரிகாரம் இருக்குதா சாமி?

மந்திரவாதி :இருக்கு….! தமிழ் வருஷங்க மொத்தம் 60.அதுல நந்தன வருஷம் அடுத்த மாசம் வருது.அன்னிக்கு வர அமாவாசையில, அந்த இறந்த உடல்களோட எலும்புகள எரிச்ச சாம்பல கரைச்சா,சாபத்துல இருந்து விடுபடலாம்.

எழுத்தாளர் :அது எப்படி சாமி?அந்த இறந்த உடல்கள் எங்க இருக்குனே தெரியலயே?

மந்திரவாதி :ஊருக்கு கிழக்க ஒரு பாழடைஞ்ச கிணறு இருக்கு.அங்கதான் எல்லாரோட எலும்புகளும் இருக்கு….

எழுத்தாளர் :அப்போ,இப்போவே அந்த எலும்கள எடுத்துட்டு வந்து ஒரு இடத்துல பத்திரப்படுத்தி வைக்கலாமே!

மந்திரவாதி :வேணாம்….அது ரொம்ப ஆபத்து.அது அங்கயேதான் இருக்கணும்.அமாவாசை அன்னிக்கு கிணத்த சுத்தி ‘மந்திரக்கட்டு’ போட்டுட்டுதான் அத எடுக்கணும்.சரி,இப்போ நீங்க போய்ட்டு வாங்க.

எழுத்தாளர் :சரி சாமி,நாங்க போய்ட்டு வர்றோம்.

என்று இருவரும் கிளம்பிச்சென்றனர்.

   அமாவாசை தினம் வந்தது….

மந்திரவாதியும்,எழுத்தாளரும்,கூட 4 பேரும் கிணற்றின் அருகே சென்றனர்.ஒரே கும்மிருட்டு.எழுத்தாளர் அதிர்ச்சி அடைந்தார்.”இங்க தான் அந்த ஆவி என்ன கூட்டிட்டு வந்துச்சு” என்று மந்திரவாதியிடம் கூறினார்.பின் கிணற்றைச்சுற்றி மந்திரக்கட்டு போட்டார்,மந்திரவாதி.கிணற்றுக்குள்ளே பார்த்தனர்.உள்ளே எலும்புக்கூடுகள் இருந்தன.

எழுத்தாளர் :சாமி,நீங்க சொன்ன மாதிரி உள்ள எலும்புங்க இருக்கு.இப்படியே பெட்ரோல் ஊத்தி எரிச்சுடலாமா?

மந்திரவாதி :இல்ல….இந்த எலும்புங்கள ஊருக்குள்ள வச்சு எரிச்சாத்தான் பலன் இருக்கும்.

    கூட வந்த 4 பேர்,கிணற்றுக்குள் இறங்கி எலும்புகளை வெளியே எடுத்தனர்.அந்த எலும்புகளை ஊருக்கு மத்தியில் நெருப்பு மூட்டி எலும்புகளை எரித்தனர்.வந்த சாம்பலை குளத்தில் கரைத்தனர்.அன்றிலிருந்து,அந்த கிராமத்திற்கு பேய் பயம் இல்லை.

பெரியவர் :எப்படியோ தம்பி….நீங்க வந்த நேரம், ஊருக்கு நல்ல காலம் பிறந்திருக்கு….ரொம்ப நன்றி தம்பி….

எழுத்தாளர் :உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்…. கிராமத்தப்பத்தி என்ன திகில் கதை எழுதலாம்னு குழப்பத்துல இருந்தேன்.உங்க ஊருக்கு வந்து ஒரு கதை தயாராகிடுச்சு. நான் போய்ட்டு வர்றேன்.

              நன்றி வணக்கம்
                  
                        –கங்காதரன்
                     ஆமணக்குநத்தம்,
                     அருப்புக்கோட்டை.

 
 
 
 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here