குடி குடியைக் கெடுக்கும்

0
1022

குடிகாரன் ஒருவன்,  கந்துவட்டிக்காரனிடம் பணம் வாங்கி இருந்தான்.பணம் வாங்கி நீண்ட நாட்கள் ஆகியும் வட்டி கட்டவில்லை.பணத்ணைக் கேட்டு ஒரு நாள் கடன்காரன் வந்தான்….

கந்துவட்டிக்காரன்: உன்கிட்ட பணம் வாங்குறதுக்குள்ள என் செருப்பு தேஞ்சிடும் போல இருக்கே…பணத்த எப்போ தருவ?

குடிகாரன்: இப்போ என்கிட்ட பணம் இல்ல.அடுத்த மாசம் வாங்கிக்கோ.

கந்துவட்டிக்காரன்: என்ன அடுத்த மாசமா?அப்போ இப்போ வட்டியாவது கட்டு..!

குடிகாரன்: யோவ்… இப்போ ஃபைனான்ஸ் கொஞ்சம் டைட்டு.அடுத்த மாசம் சேர்த்து வாங்கிக்கோ.

கந்துவட்டிக்காரன்:அதெல்லாம் எனக்குத் தெரியாது,இன்னிக்கு காசு வாங்காம போக மாட்டேன்.உனக்கு குடிக்க காசு இல்லைனா தேடி வந்து காசு வாங்குனல்ல…இப்போ பணத்த கேட்ட சாக்கு போக்கு சொல்ற..

குடிகாரன்:யோவ்….உனக்குத் தேவ பணம்,அத மட்டும் கேளு.அத விட்டுட்டு தேவையில்லாம பேசாத.

கந்துவட்டிக்காரன்: உனக்கு பணம் தேவைனா காலக்கூட பிடிக்குற,பணத்த திருப்பி கேட்டா திமிரா பேசுற.உனக்குப் போயி பணம் கொடுத்தேன் பாத்தியா என்ன சொல்லணும்.

குடிகாரன்: யோவ்… உனக்கு அவ்வளவு தான் மரியாத.நான் தான் அடுத்த மாசம் தரேன்னு சொல்லிட்டேன்ல?

கந்துவட்டிக்காரன்: என்னடா….விட்டா பேசிட்டே போற?உன்கிட்டல்லாம் வாயால பேசக்கூடாது…..

(என்று கையை ஓங்கினான்.அப்போது குடிகாரனின் மனைவி அதைப் பார்த்து…)

குடிகாரன் மனைவி: ஐயா….அவர ஒண்ணும் செய்யாதீங்க…இந்த ஒரு தடவ மன்னிச்சிடுங்க. அடுத்த தடவ நானே பணத்த கொடுத்திடறேன்.

கந்துவட்டிக்காரன்: உன் புருஷன் என்ன பேச்சு பேசுனா தெரியுமா?இவனெல்லாம் அடிச்சி கொல்லணும்.

குடிகாரன்: கொல்றா…கொல்றா பாப்போம்.

குடிகாரன் மனைவி: சும்மா இருய்யா… ஐயா இவருக்காக நா மன்னிப்பு கேட்டுக்கிறேன்.வேணும்னா உங்க காலுல கூட விழறேன்.

(பின் கந்துவட்டிக்காரன் யோசித்து…)

கந்துவட்டிக்காரன்: சரி உனக்காக விடுறேன்.அடுத்து வரும் போது பணத்த தரலனா வீடு ஏலம் போய்டும்.

(என்று கிளம்பினான்…. பின் அவனின் பத்து வயது மகள் வந்தாள்..)

குடிகாரன் மனைவி : போதுமாயா?ஏற்கனவே வீட்டுல இருக்குற பண்ட பாத்திரமெல்லாம் அடகு வச்சி குடிச்ச.இப்போ குடும்ப மானத்தையே அடகு வச்சி சந்தி சிரிக்க வச்சிட்டயே.?இந்த பச்சக்கொழந்த முகத்த பாத்தாவது திருந்தித் தொலைய்யா..?

குடிகாரன்:என்னடி…குடிக்கிறதுக்கு காசு கொடுத்தா நா ஏன்டீ கந்துவட்டிக்கு பணம் வாங்கப்போறேன்?நீ பணம் கொடுக்குற வரைக்கும் இப்படித்தான் பண்ணுவேன்….

மனைவி: பண்ணுயா… நல்லா பண்ணு…இந்த குழந்த மட்டும் இல்லன்னா எப்பயோ செத்து தொலஞ்சிருப்பேன்.

குடிகாரன்: செத்துத் தொலைய வேண்டியதுதான?ஏன்டீ இருந்து என் உசுர எடுக்குற?சாவு எனக்கென்ன?

மனைவி: செத்துத் தொலயுறேனே….ஆனா நா செத்தா என்னோட பொணத்த கூட நீ பாக்க வரக்கூடாது.

(என்று தன் மகளை கூட்டிக்கொண்டு கிளம்பினாள். இதையெல்லாம் அவன் மகள் பார்த்துக் கொண்டிருந்து ஒரு முடிவு எடுத்தாள்.)

மறுநாள்…..கலெக்டர் அலுவலகத்திற்கு அவனின் மகள் சென்றாள்.அவளைப் பார்த்து…..

டவாலி: என்ன பாப்பா….?என்ன வேணும்?

குடிகாரன் மகள்: நா கலெக்டர் சார பாக்கணும்.

டவாலி: கலெக்டரையா எதுக்கு?

குடிகாரன் மகள்: புகார் கொடுக்கணும்.

டவாலி: இதோ பார்றா…! புகாரா?யாரு மேல? பாப்பா…போய் உங்க அப்பா அம்மாவ கூட்டிட்டுவா.

(அப்போது கலெக்டர் அங்கு வந்தார்.)

கலெக்டர்: என்ன பிரச்சன?

டவாலி: சார்..இந்த குழந்த உங்கள பாக்கணும்னு சொல்லிச்சு.

கலெக்டர்: என்னையா?என்ன விஷயம் பாப்பா?

குடிகாரன் மகள்: ஐயா எங்க அப்பா தினமும் குடிக்குறாரு….அதுக்காக கந்துவட்டிக்காரன் கிட்ட கடன் வாங்குனாரு.பண்டிகை வந்தா எல்லார் வீட்டுலயும் சந்தோஷம் இருக்கும், ஆனா எங்க வீட்டுல பண்டிகை வந்தா சண்டதான் வருது.கந்துவட்டிக்காரரு எங்க வீட்டுக்கு வந்து சண்ட போட்டுட்டு போய்ட்டாரு.நீங்கதான் சாராயக்கடையையும்,கந்துவட்டியையும் ஒழிக்கணும்.

(அதைக் கேட்டதும் கலெக்டர் கண் கலங்கினார்.பின் டவாலியைப் பார்த்து.,)

கலெக்டர்: பாத்தியாப்பா….!இந்தக் குழந்த எவ்வளவு தூரம் மனசு கஷ்டப்பட்டிருந்தா கலெக்டர் ஆபிஸ்க்கு புகார் கொடுக்க வந்திருப்பா!இந்த குழந்தைக்காகவாவது ஏதாவது செய்யணும்.செய்றேன்…..

(பின் கந்துவட்டிக்காரனை கைது செய்தனர்.மதுக்கடையையும் அப்பகுதியில் மூடினர்.ஒரு குழந்தையின் முயற்சியால் கந்துவட்டியும்,மதுக்கடையும் ஒழிந்ததை எண்ணி வியந்தனர்.)

-க.கங்காதரன்.

Post By  – 
TiruppurFm 
Tiruppurmediaworks – Tup

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here