தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்துக்கு அருகிலுள்ள சிவன்மலையில் அமைந்துள்ள அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை கொண்ட முருகன் கோயில் ஆகும்.

பெயர்க்காரணம்

சிவவாக்கியம் எனும் நூலை இயற்றிய சிவவாக்கியர் சித்தர் சிவன் மலையில் தங்கி தமது விருப்பதெய்வமான முருகப்பெருமானுக்கு திருக்கோயில் எழுப்பி வழிபட்டார். அவர் பெயரிலேயே மலை ’சிவன் மலை’ என்று வழங்கப்பட்டது.

கற்பந்தல்கள்

மலைப்படியில் நடந்து செல்லும் போது பக்தர்கள் ஓய்வெடுக்க பல கற்பந்தல்கள் (மண்டபங்கள்) அமைந்துள்ளன.

கோயில்

சிவன்மலை கோயிலுக்கு வெளியே தீபத்தூண் உள்ளது. அத் தூணின் அடிப்புறத்தில், விநாயகர் (கிழக்கே), சூலம் (தெற்கே), மயில் ((வடக்கே) மற்றும் தண்டபாணி (மேற்கே) வடிக்கப்பட்டுள்ளது. கோயிலின் உள்ளே தெற்குப் பிரகாரத்தில், கைலாசநாதர், ஞானாம்பிகை சன்னிதிகள் கிழக்குமுகமாக உள்ளன. மேற்குப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் கன்னிமூலை விநாயகரும், வடமேற்கில் தண்டபாணியும், கருவறையின் வெளிச்சுவற்றில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, துர்க்கைக்கு எதிரில் சண்டிகேஸ்வரர் உள்ளனர். சனிபகவானுக்குத் தனி சன்னிதியும் அதுதவிர நவக்கிரக சன்னிதியும் அடுத்து பைரவர் சன்னிதியும் அமைந்துள்ளன.

பிரகாரம் சுற்றிவந்து, கொடிமரம், மயில்வாகனக் குறடு, பலிபீடம் கடந்தால், சுமுகர், சதேகர் துவாரபாலகர்கள். அடுத்து உள்ளே கருவறையில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி சமேதராக இருக்கிறார்.

இக்கோயிலின் தலவிருட்சமாக தொரட்டி மரம் உள்ளது.

மரபு வரலாறு

சிவன் திரிபுரத்தை அழிக்க மேருமலையை வில்லாகப் பயன்படுத்தியபோது அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது. இது பார்வதி மற்றும் அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் என்றும், வள்ளிமலைக்குச் சென்று வள்ளியை மணம்முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு குடிகொண்டதாகவும் வரலாறு உள்ளது.

இந்த வரலாறு ’சிவமலைக் குறவஞ்சிப் பாடலில்’ கூட குறிப்பிடப்படுகின்றது.

அந்த மேரை ஈசன் திரிபுர சம்ஹாரம்
செய்ய வளைக்குங் காலை
முந்து கொடுமுடியுள் ஒன்று சிந்தி இங்கு
வந்த சிவமலை இம்மலையே!’

உத்தரவுப் பெட்டி

உத்தரவுப் பொருட்கள் வைக்கப்படும் பெட்டி

இந்தக் கோயிலில் ஆண்டவன் உத்தரவின் பெயரில், ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்வது வழக்கமாக உள்ளது. பூசைக்குப் பின்னர், அப் பொருள் ’உத்தரவுப் பெட்டி’ என்றழைக்கப்படும் கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது.

உத்தரவுப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளின் தேர்வு முறை

ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து சிவன்மலை முருகன் ஒரு குறிப்பிட்ட பொருளை வைத்து பூஜை செய்ய உத்தரவிட, அந்த பக்தர் அப் பொருளை இக்கோயிலுக்குக் கொண்டு வருகிறார். அதன் நம்பகத்தன்மைக்காக கடவுள் முன் பூப்போட்டுப் பார்த்து உறுதி செய்யப்பட்ட பின்னர் அப் பொருள் கடவுளின் முன் வைத்துப் பூசைசெய்யப்பட்டு, மக்கள் பார்வைக்காக முன்மண்டபத்திலுள்ள உத்தரவுப் பெட்டிக்குள் வைக்கப்படுகிறது. வேறொரு பக்தரின் கனவில் மற்றொரு பொருளுக்கான உத்தரவு வரும்வரை பழைய பொருளே உத்தரவுப் பெட்டியில் நீடிக்கிறது. நடக்கப்போகும் நிகழ்வுகளின் முன்னறிவிப்பாக இப்பொருள்கள் முக்கியத்துவம் பெற்றவவை என்பது பக்தர்களின் நம்பிக்கை

சித்தர்கள்

சிவன்மலையில் இன்றும் ஏராளம் சித்தர்கள் தவம் செய்துகொண்டிருக்கின்றனர். புண்ணியம் செய்தோர் கண்களில் அவ்வப்போது சில சித்தர்கள் புலப்படுவதுண்டு.

காசித் தீர்த்தம்

இத்தல முருகரின் பக்தையான ஒரு பெண் காசி சென்று நீராட விரும்பியும் காசி செல்ல வசதியில்லாததால் மனம் வருந்த, தம் பக்தைக்காக முருகப்பெருமான் காசித் தீர்த்தத்தை இத்தலத்திற்கே வரவழைத்தார்.

மற்ற சிறப்புகள்

  • மற்ற திருத்தலங்கள் போலன்றி இங்கு முதல் வழிபாடு முருகப்பெருமானுக்கே. மற்ற திருத்தலங்களில் முதல் வழிபாடு பிள்ளையாருக்கே.
  • நவக்கிரகங்கள் அனைத்தும் சூரியபகவானைப் பார்த்து நிற்கின்றன.

சிவபெருமான் சந்நதி

ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநாதர் சன்னதியும் உள்ளது. சிவபெருமான், உமையம்மைக்கும் நவகன்னியருக்கும் தரிசனம் தந்தருளியதாக தலவரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

கருணை இல்லம்

1997 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் முதல் இக்கோயில் நிர்வாகத்தின்கீழ் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ’கருணை இல்லம்’ ஒன்று இயங்கி வருகிறது. இத் திட்டத்தில் 25 குழந்தைகளுக்கு உணவு, உடை, உறைவிடம் மற்றும் கல்வி வழங்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here